2914. கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக்
       கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன
     வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத
     மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை
     யூர்தியே.                         5

     5. பொ-ரை: ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில்
தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன்
சிவபெருமான். புலித்தோலை ஆடையாகவும், பாம்பை அரையில்
கச்சாகவும் கட்டியவன். அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில்,
ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு, எருக்கு, ஊமத்தம் ஆகிய
மலர்களையும், மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில்
சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: கலிபடு - ஓசைபொருந்திய கடல் - இதனால் கடல்
ஆர்கலி எனவும் படும். மதம் - ஒருவகை வாசனை. மத்தம் -
பொன்னூமத்தை. தக்கனிட்ட சாபத்தினால் நாடோறும் ஒவ்வோர்
கலையாய்க் குறைந்து ஒரு கலையோடு சிவனைச் சரண்
புகுந்தமையின் ‘மெலிதரு பிறை’ யெனப்பட்டது.