2915. வாருறு மென்முலை மங்கைபா டநட
       மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல்
     வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன
     வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ
     லோகனே.                        6

     6. பொ-ரை: கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய
உமாதேவி பாட, அதற்கேற்ப நடனம் ஆடி, கார்காலத்தில்
மலர்கின்ற கொன்றைமலரையும், வெண்ணிறத் திங்களையும்
சடையிலே சூடி,
நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப்
பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில்
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய
சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான்.

     கு-ரை: மங்கை - சிவகாமவல்லி. மங்கை பாட நடமாடி.
கொன்றைமரம் விசேடமாகப் பூப்பது கார்காலத்தில் ஆதலால்
“காருறு கொன்றை” எனப்பட்டது “கண்ணி கார்நறுங்கொன்றை”
எனப் புறநானூற்றில் வருவது காண்க. சிறப்புப்பொருந்திய செல்வம்
பெருகப் புனவாயிலில் இருந்தருளியவன்.