2917. மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி
       ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட
     மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின்
     மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன
     வாயிலே.                           8

     8. பொ-ரை: செருக்குடைய மனம் உடையவனும், வேல்,
வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான
இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும், பெருமையுமுடைய
கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில்
போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகுற
விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும்
தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும்.

     கு-ரை: மனம்மிகு - ஊக்கம் மிகுந்த. வேலன் - இங்கு வேல்
முதலிய போர்ப்படைகளையுடையவன். வேல் - உபலக்கணம்.
இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற
ஆயுதங்களும் உண்டு ஆதலால், வேலன் எனப்பட்டான். வேலன்
- காரணக்குறி, காரண இடுகுறியன்று. வலிஒல்கிட-வலிமை
குறையும்படி, வனம் - சோலைகள். இனம் மிகு - பல்வகைப்பட்ட,
தொல் புகழ் - சிவபிரானது பழமையான புகழைப் பாடுவதும், பாடி
ஆடுவதும் ஆகிய அழகுமிகுந்த புனவாயில், அடர்த்தானது
இடம் ஆகும். புனம் - காடு; முல்லைநிலம். கொன்றை முல்லைக்
கருப்பொருளாதலால் ‘புனம் மிகுகொன்றை’ எனப்பட்டது. கொன்றை
மரச்சோலையிலே தென்றல் உலாவு வாயில் என்க. இது “தென்றலார்
புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையும் சடையார்’ என்று வேறு
இடத்தும் வருவதறிக.