2919. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி
       யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர்
     வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன
     வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை
     வீடுமே.                           10

     10. பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் சாதித்துக்
கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய
வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள்
நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலி்ல் வீற்றிருந்தருளும்
வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி
வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும்.

     கு-ரை: போதி - அரசமரம். போதி எனப் பெயராயினாரும்
என்பது புத்தரைக் குறித்தது. சமண் - சமணர்.

     எய்தன்மின் - எய்தா(அடையா) தீர்கள். வேதன் - வேதத்தின்
பொருளாயுள்ளவன்.