2922. ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம
       வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர
     மேட்டியும்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்
     கோட்டாற்றுள்
ஆலநீழற்கீ ழிருந்தறஞ் சொன்ன
     அழகனே.                           2

     2. பொ-ரை: மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை
நல்லாளான, இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின்
ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான்,
வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய
திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில்
தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம்
உரைத்த அழகனாவான்.

     கு-ரை: ஏலம் - மயிர்ச்சாந்து. பால் - (இடம்) பக்கம். “அறம்
சொன்ன அழகன்” அறம் என்பது, புருடார்த்தங்களையன்று.