2923. இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை
       யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி
     கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்
     கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ
     கனன்றே.                           3

     3. பொ-ரை: சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக்
கையில் ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை
மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன்.
கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன்,
காய்களும், கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை
சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில்
எழுந்தருளியுள்ளான்.

     கு-ரை: இலை மல்கு சூலம், மல்கு உவமானம். மலைமல்கும்
மங்கை - மலைகளோடு மிக்க உறவுடைய மங்கையாகிய
உமாதேவி, இமயமலை, கயிலை நீங்கிய ஏனையமலைகளுக்கும்
அரசனாதலின் அம்மலைகளெல்லாம் அம்பிகைக்கு உரியவாயின.
கயிலைமலை அவளுடையதேயானால் “மலை மல்கு மங்கை”
என்பதில் யாது வியப்பு? குலை - சோலைகளின் மரங்களிற்
காய்த்துத் தொங்கும் குலைகள். அலை - சினையாகு பெயராய்க்
கங்கையை யுணர்த்திற்று.

     உகப்பு - உயர்வு என்னும் பொருளில் வரும் உரிச்சொல்.
உகந்த - உவந்த, விரும்பிய என்ற பொருளில் இங்கு வந்தது.
“ஆயிரம் பேருகந் தானும் ஆரூரமர்ந்த அம்மானே” என்னும்
அப்ப மூர்த்திகள் தேவாரம் முதலியவற்றானும் அறிக.