2927. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர்
       வண்ணனும்
வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு
     பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக்
     கோட்டாற்றுள்
அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ
     கனன்றே.                            7

     7. பொ-ரை: துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில்
சூடியவன் சிவபெருமான். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த
நிறமுடையவன். பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற
கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக்
கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த
நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி
நின்ற அழகன் அல்லனோ?

     கு-ரை: வண்டு அமரும் குழல் - பூவில் உள்ள தேனை
விரும்பி வண்டுகள் தங்கும் கூந்தல். அண்டமும் எண்திசையும்
ஆகித்
திருக்கோட்டாற்றுள் எழுந்தருளியுள்ள அழகனே சுடர்
வண்ணனும் மங்கையாளோர் பங்கனும் ஆவான். சுடர் - தீ.
“சோதியே சுடரே” என்ற திருவாசகம் காண்க.