2928. இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங்
       கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி
     செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
     கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள்
     செய்யுமே.                         8

     8. பொ-ரை: இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை
மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப்
பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குரா
மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி, தன்
அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.

     கு-ரை: ‘கரவு அமரக் கயிலை எடுத்தான்’ - திக்கு விசயம்
பண்ண வந்த இராவணன், விமானத்தோடு கயிலையைக் கடக்க
வேண்டியபொழுது, தன் ஆற்றல் கருதாது பொருதற்குந் தூது
அனுப்பிப் போர்புரிந்து வென்று கடக்க வேண்டும்; அன்றேல், தன்
எளிமை கருதி அஞ்சி விரும்பி வரம் பெற்றுச் செல்ல வேண்டும்;
இவ்விரண்டுமல்லாதது வஞ்சச் செயலாதலால் கரவு அமரக் கயிலை
எடுத்தான் எனப்பட்டான். குரவு - ஒருவகை மரம்; அதன் பூ
சிவபூசைக்குரியது