2933. மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
  வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.         2

     2. பொ-ரை: பழமையான அணிவகுப்பையுடைய
முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய
அம்பினால்
அழித்தவராகிய சிவபெருமான், மலர்கள் நிறைந்த
அழகிய சோலைகளையுடைய திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில் மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய
உமாதேவியின் தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார். அவரைத்
தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.

     கு-ரை: மூது அணி-பழமையான அணிவகுப்பையுடைய.
முப்புரத்து எண்ணிலோர்களை-முப்புரத்திலிருந்த அளவற்ற
அசுரர்களை. வேது அணி சரத்தினால் வீட்டினார்
அவர்-வெம்மையையுடைய அம்பினால் அழித்தவராகிய
அப்பெருமான். திரிபுரம் எரித்தநாளில் அம்பின் அடிப்பாகம்
வாயு, இடைப்பாகம் திருமால், நுனிப்பாகம் நெருப்பு ஆக
அமைந்தமையால், வேது அணி சரம் எனப்பட்டது. போது
அணிபொழில்-மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோலைகளை
உடைய. தாது அணி குழல் உமை-மகரந்தப் பொடிகளைக்
கொண்ட கூந்தலையுடைய உமாதேவியார்.