2937. துங்கிய றானவர் தோற்ற மாநகர்
  அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி யரிவை பங்கரே.             6

     6. பொ-ரை: அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்ற
தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும், நெருப்பால்
அழியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய சிவபெருமான்,
பொங்கும் கடலையுடைய அழகிய திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் அழகிய
கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக
உடையவர். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப்
பெறுங்கள்.

     கு-ரை: துங்கு இயல் தானவர் தோற்றம் மாநகர் -
அசுரர்களின் தோற்றத்தையுடைய பெரிய புரங்களை.
ஆய்ந்த-ஆராய்ந்து செலுத்திய. அம்கயல் அ(ன்)ன கணி
அரிவை-அழகிய கயல்மீனை ஒத்த கண்ணியாகிய உமாதேவியார்
(உடையவர்.)