2938. அண்டர்க ளுய்ந்திட வவுணர் மாய்தரக்
  கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.      7

     7. பொ-ரை: சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும்
நன்மை அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர்.
கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர். தாமரை
மலர்கள் பூத்துள்ள வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். பூவிலுள்ள தேனை
உண்ணும்பொருட்டு வண்டு அமர்கின்ற கூந்தலையுடைய
உமாதேவியின் மணாளர் ஆவார். அப்பெருமானைத் தரிசித்துப்
பிறவிப் பயனைப் பெறுங்கள்.

     கு-ரை: மாய்தர-மாய்-பகுதி. தர-துணைவினை.
கண்டவர்-செய்தவர்.