2940. தாமுக மாக்கிய வசுரர் தம்பதி
  வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமக னறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமக னெழில்பெறு மரிவை கூறரே.           9

     9. பொ-ரை: தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம்
செய்த அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த
விகிர்தர் சிவபெருமான். திருமாலும், பிரமனும் அறிய ஒண்ணாதவர்.
திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான
சிவபெருமான் அழகிய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக்
கொண்டவர். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.

     கு-ரை: தாம்-தாங்கள். முகம் ஆக்கிய - முகம்போற்
சிறப்புடையதாகக் கொண்ட. வேம்முகம் ஆக்கிய-வேகும்
இடமாகச்செய்த. விகிர்தர்-வேறுபட்டதன்மையையுடையவர்.
பூமகன்-பிரமன். முகம்-முதலடியிற் சிறப்புடையது என்னும்
பொருளிலும். இரண்டாமடியில் இடம் என்னும் பொருளிலும் வந்தது.
பூமகன்-இங்கு எண்ணும்மை தொக்கது. கோமகன்-தலைவன்.