2943. ஆரிடம் பாடி ரடிகள் காடலால்
  ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.      1

     1. பொ-ரை: சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை
அருளிச் செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு
குறையும் இல்லாதவர். அணிவது கோவண ஆடை. சடைமுடியில்
கங்கையைத் தாங்கியவர். இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும்
பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: ஆரிடம்-இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை.
பாடிலர்-பாடலாகவுடையவர். காடு அலால்-புறங்காடு அல்லாமல்.
ஓர் இடம் இலர்-ஓர் இடம் குறை இலர். அதனால் ஒரு குறைவும்
இல்லாதவர். நீர் இடம் சடை-தண்ணீர் இருக்கும் இடம் சடை;
பாரிடம்-பூதம்; பாடுவது. வேதம், தங்குவதும் புறங்காடு. வேலை
செய்வது பூதம். அத்தகையார் வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும்
என்பது. பயிலல், முதல் நிலைத் தொழிற்பெயர்.