2944. |
மருவிலார்
திரிபுர மெரிய மால்வரை |
|
பருவிலாக்
குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான்
பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே. 2
|
2.
பொ-ரை: பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து
சாம்பலாகுமாறு
மேரு என்னும் பெருமையுடைய மலையினை
வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். இத்தகைய வடிவ
முடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத
அப்பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப்
பெறாதவர். அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா?
கு-ரை:
மருவிலார் - பகைவர். பரு வில் ஆ-பருத்த
வில்லாதலின். குனிதல்-வளைதல். பைஞ்ஞீலிமேவலான்
-திருப்பைஞ்ஞீலியில் மேவுதலையுடையவன்.
உருஇலான்-வடிவமில்லாதவன். அவன் பெருமையையுணர்பவர்
திருவுடையவர். உணர்கிலாதவர்; திருவிலாதவர். அவர்களை
அறிவுரை கூறித்தெளிவிக்க இயலாது என்பது பாசுரத்தின்
இறுதிப் பகுதியின் பொருள். உருவிலான்-சிவனுக்கு ஒரு பெயர்.
உளங்கொளல்-உணர்தல்.
|