2946. கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
  பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே.           4

     4. பொ-ரை: காந்தள் மலர்களிலும், முல்லை நிலத்திலுள்ள
காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும்
வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க,
திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர்
அலியல்லர். ஆணுமல்லர். பெண்ணுமல்லர். திருநடனம் புரிவதில்
விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார்.

     கு-ரை: கோடல்-காந்தள் புறவணிகொல்லை முல்லைமேல்
பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலி-முல்லை நிலத்தைச்
சார்ந்த காடுகளில் முல்லை மலரின் மேல் பாடுதலையுடைய
வண்டினம் இசைமுரலுதல் பொருந்திய திருப்பைஞ்ஞீலி. முரலுதல்
மூக்கினால்-ஒலித்தல். முரலுதல் என்ற சொல் பகுதியளவாய் முரல்
என்று நின்றமை முதனிலைத் தொழிற் பெயர். பயில்
பைஞ்ஞீலி-வினைத்தொகை.