2947. விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
  சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.     5

     5. பொ-ரை: விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக்
கையில் ஏந்தி, இளம்பிறையையும், கங்கையையும் சடையில்
தாங்கியுள்ளவன் சிவபெருமான். பழியிலாத அடியவர்கள் போற்றிப்
பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வ மில்லாத
வறுமைநிலையைப் போக்குவான்.

     கு-ரை: நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச்
சுற்றிய சடையிடத்தே தரித்தவன். சுழியில் ஆர் -சுழியோடு
பொருந்திய, வேற்றுமை மயக்கம். பைஞ்ஞீலி
பாடலான்-திருப்பைஞ்ஞீலியின் கண் பாடுதலையுடையவனாகி
வீற்றிருப்பவன்.