2949. |
தூயவன்
தூயவெண் ணீறு மேனிமேல் |
|
பாயவன்
பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ. 7 |
7.
பொ-ரை: இறைவன் தூயஉடம்பினன். தூய்மையான
திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன். திருப்
பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுபவன். மூங்கிலைப் போன்ற தோளையுடைய
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான்
சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே!
கு-ரை:
பாய்தல்-பரவுதல். வெண்ணீறுமேனி மேல்பாயவன்-
வெண்ணீற்றை உடம்பின்மேல் பரவப்பூசினவன். பாய-இடமகன்ற
(விஸ்தாரமான) பைஞ்ஞீலி. கோயில்-மரூஉ. மேயவன்-விரும்பியவன்.
மே-விருப்பம். நம்பும் மேவும் நசையாகும்மே (தொல், சொல், உரி.)
வேய்புரை தோளி-மூங்கில் போன்ற தோளையுடையவள். பாகமா
ஏயவன்-பாகமாகப் பொருந்தியவன். சிவனாகிய என்னைச் சீவனாகச்
செய்யும் பண்பு என்னே? எனக் கடைசியடிக்குப் பொருள் கொள்க.
கொல்-அசைநிலை.
|