2952. பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
  சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.        10

     10. பொ-ரை: மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும்
சமணர்களும், திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும்,
தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும்
வல்லமையில்லாதவர்கள். எனவே, அவர்களின் உரைகளைக்
கேளாது, வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து
அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும்,
திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
வனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து
வணங்கி வாழ்வீர்களாக!

     கு-ரை: பீலியார்-மயிற்பீலியை யேந்திவரும் சமணர். எறும்பு
முதலிய உயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு மெல்லிய பொருளாகிய
மயில் தோகையால் வழியைச் சீத்துச் செல்வது சமணமுனிவர் செயல்.
பிடகர்-புத்தர்; புத்த தருமம் உரைக்கும் நூல் பிடகம் எனப்படும்.
வகைநோக்கித் திரிபிடகம் எனவும் படும். நூன்மை-நூலின் பொருள்.
சாலியாதவர்-சாதியாதவர்.