2953. கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
  நண்புண ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.         11

     11. பொ-ரை: தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய
சீகாழியில், கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்டும்
நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையவர்
வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள
இறைவனைப் பாடிய
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள்,
வினைப்பயன்களை நுகர்வதற்காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி
வாழ்வர்.

     கு-ரை: கண்-இடமெல்லாம். புனல்-நீர் நிலையையும்,
விளைவயல்-விளையும் வயல்களையும், உடைய. காழி-சீகாழியுள்.
கற்பகம்-கற்பகத்தருவாகிய. உண்பின உலகினில்-முற்பிறப்பில்
செய்த வினைகளை நுகர்தற்குரியபுவனமாகிய இவ்வுலகத்தில்.
உண்பின-குறிப்புப் பெயரெச்சம்.