2955. படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
  உடைவிரி கோவண முகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.      2

     2. பொ-ரை: இறைவர் மழுவைப் படையாக உடையவர்.
பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர். கோவணத்தை
உகந்து அணிந்தவர். இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர்.
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர்
அல்லரோ?

     கு-ரை: படையுடை மழுவினர்-மழுவைப் படையாகவுடையவர்.
தோலின் உடை-தோலாகிய உடை, இங்கு இன்-தவிர் வழிவந்த
சாரியை யென்பர் நச்சினார்க்கினியர். “முள்ளின் ஊசித்துன்ன”-சீவக
சிந்தாமணி. சடையில் புனல் வைத்த திறமையையுடையன். இதில்
திறமை என் எனில் நீரானது உச்சியிலிருந்து கீழே வழிந்து ஒருவழி
நில்லாமல் பரந்து ஓடிச்செல்லும்; நிலத்துக்கு ஏற்ற இயல்பையுடையது.
சுவையடையும் இயல்பினது, அதனை அடக்கித் திவலையாக்கிச்
சடையில் நிலையாகவைத்தல் ஒரு திறமையே யாம். அவ்வாறு செய்து
பழகி அப்பழக்கத்தால் கீழ்நோக்கிப் பல்லாயிர
நினைப்பாகப் பரவிச் சார்ந்ததன் வண்ணமாக விரிந்து ஓடும் என்
மனத்தை அணு அளவிற்றாக்கித் தன் திருவடியை நினைக்க
நிலைக்க வைத்த வல்லாளன் என்னும் கருத்து.