2958. |
பூதங்கள்
பலவுடைப் புனிதர் புண்ணியர் |
|
ஏதங்கள்
பலவிடர் தீர்க்கு மெம்மிறை
வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே. 5
|
5.
பொ-ரை: எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய
புனிதர். புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின்
குற்றங்களையும், துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர்
வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும்
தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?
கு-ரை:
ஏதம்-குற்றம். ஏதங்களையும் பல இடர்களையும்
தீர்க்கும் எமது பதி. வெண்காடு மேவி. பரமர் பாதங்களைத் தொழ என்பதற்கு
அடியார் என வினைமுதல் வருவித்துரைக்கப்படும்.
அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி
பயிலும் என்புழிப்போல. (தி.2. பா.43. பா.5.) பரமர்-பரம்பொருள்,
மேலான பொருள்.
|