2962. ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
  தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிகள் அல்லரே.        9

     9. பொ-ரை: பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில்
வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும்
காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய்
விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன்
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம்
புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?

     கு-ரை: ஏடு-பூ இதழ். தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார்
வேடம் உடைய திருவெண்காடு ஆடலை. அமர்ந்த-விரும்பிய.
எம் அடிகள் எனத் தனித்தனிக் கூட்டுக.