2966. ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்
  சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே       2

     2. பொ-ரை: நலம் தரும் இறைவனின் திருவடிகளை
மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள்
இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி
மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால்
உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: நல்ல திருவடிகளை மலர்கொண்டு முற்றப்
பூசிப்பவனாய். சாற்றிய-அபயம் என்று சொல்லிய. அந்தணன்
-மார்க்கண்டேயர். ஆற்ற ஏத்துவானாய்ச் சாற்றிய அந்தணன்
என்க. தகுதி-இறுதி. மாற்றலன் ஆகி-யாவராலும் தவிர்க்க
முடியாதவனாகி. வந்து அணை-வந்து அடைந்த. கூற்றினை
உதைத்தனர் கொள்ளிக்காடர். மாற்றுதல்-“மாற்றேனெனவந்த
கூற்றனை மாற்றி” என்று திருவாசகத்திலும் வருதல் காண்க.