2969. வாரணி வனமுலை மங்கை யாளொடும்
  சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லாரெயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.         5

     5. பொ-ரை: கச்சணிந்த அழகிய முலையுடைய
உமாதேவியோடு, சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும்
சிவபெருமான், நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு
பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை
அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர். அப்பெருமான்
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: சீர்அணி திருவுரு - சிறந்த அழகோடு கூடிய
திருவுருவம். நார் - நாரி, நாணி, நணுகலார் - பகைவர். கூர்
எரி - மிக்க நெருப்பு. கொளுவினார் - பற்றவைத்தார்.