2970. |
பஞ்சுதோய்
மெல்லடிப் பாவை யாளொடும் |
|
மஞ்சுதோய்
கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின
மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. 6 |
6.
பொ-ரை: செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய
பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, மேகத்தைத்
தொடும்படி உயர்ந்துள்ள
கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள்
தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர்,
கொடிய சினத்தோடும், கொம்போடும் வேகமாக வந்தடைந்த
யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர்.
அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
செம்பஞ்சுக்குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தை
யுடைய பதுமை போன்ற அம்பிகை. மஞ்சு-மேகம். கொடிய
சினத்தோடும் மருப்போடும் வந்தடைந்த குஞ்சரம் என்க.
|