2977.
|
கீதமுன்
னிசைதரக் கிளரும் வீணையர் |
|
பூதமுன்
னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே. 2
|
. 2.
பொ-ரை: கீதங்களை முன்னே இசைக்க விளங்கும்
வீணையினை உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான
சிவபெருமானின் பொன்னகர் என்பது, இடபதேவர் வழிபட
விளங்குவதும், நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது
போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். கோதனம்
வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர்.
ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக்
கூறுவர்.
கு-ரை:
இசைப்பாட்டு முன்னே இசைக்க விளங்கும்
வீணையையுடையர் என்பது முதலடியின் பொருள். பூதம்...புனிதர் -
பூதங்கள் முன்னால் தம்மைச் சூழ நடந்துவரச்செல்லும் தூயோர்.
கோதனம் - பசு. இங்கே இடபதேவரைக் குறிக்கும். புடைமலிந்த
பூதத்தின் பொலிவு தோன்றும் வெள்விடைக் கருள்செய்
விசயமங்கை என்னும் அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் காண்க.
|