2978. அக்கர வரையினர் அரிவை பாகமாத்
  தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.        3

     3. பொ-ரை: உருத்திராக்கத்தையும், பாம்பையும் அணிந்த
இடுப்பையுடையவரும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவரும்,
சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர், தகுதியுடைய
நல்ல தேவர்களும், அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும்
வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.

     அக்கு - உருத்திராக்கம். இதனை “அக்கு மாலை
கொடங்கையி வெண்ணுவார்” (தி.3 ப.307 பா.3) என்ற
திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக.

     கு-ரை: அக்கு அரவு அரையினர் - அக்குப் பாசியையும்
பாம்பையும் அணிந்த இடுப்பை உடையவர். அரை - அளவையாகு
பெயர். சோதி-சிவனுக்கு ஒரு பெயர். வானவர்......மிக்கவர் -
வானவரும் அவர்கள் தலைவராகிய இந்திரன், பிரமன், திருமால்
முதலியோரும் அவரினும் மிக்க அடியார்களும். தொழுது எழு
விசயமங்கையே சோதி தொல் நகர். அக்கு - எலும்பும்,
உருத்திராக்கமும் ஆம்.