2982. இரும்பொனின் மலைவில்லின் எரிச ரத்தினால்
  வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.       7

     7. பொ-ரை: பெரிய மேருமலையாகிய வில்லினால்
எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடி
செய்த பெரும் வீரமுடையவன் இறைவன். வண்டுகள் அமர்கின்ற
கொன்றை மலர் மாலையையும், தூய ஊமத்தை மலரையும் விரும்பி
அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: இரும் பொ(ன்)னின் மலைவி(ல்)லின் - பெரிய
பொன்மலை (மேரு) வில்லினால். எரி - நெருப்பாகிய சரத்தினால்
(அம்பினார்) திரிபுரமெரித்த அம்பின் நுனிப்பாகம் தீக்கடவுளாய்
இருந்தமையால் “எரி சரம்” எனப்பட்டது. அ(ண்)ணல் -தலைவன்.