2984. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
  அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.     9

     9. பொ-ரை: மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான
சிவபெருமானது ஊர், குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும்
சந்தனமும், பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும்
திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: இப்பாடலின் முற்பகுதிக்குத் திருமால் பிரமர்கள்
என்பது பொருள். அத்தன்-தலைவன்.