2986. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
  நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.        11

     11. பொ-ரை: விண்ணவர்கள் தொழுது வழிபடும்
திருவிசயமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில்
அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள்
பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர்.
அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும்.

     கு-ரை: ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்.
சிவ புண்ணியச் செல்வர் ஆவர். அவர்கள் சிவாநந்தப் பெரு
வாழ்வு அடைவது திண்ணம்.