2990. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
  தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.  4

     4. பொ-ரை: பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான
உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த
மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும்
திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட்
சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: கொம்பு இயல் கோதை - ஸ்தலத்து அம்பிகையின்
பெயர். பூங்கொம்பு அசைவதுபோல் நடக்கின்ற அம்பிகை; கோதை
- பெண். குஞ்சரத்தும்பி - இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை.
துங்கர் - மேலானவர். வம்பு இயல் - வாசனையையுடைய சோலை
சூழ்ந்த தலத்துக்கு மேற்றிசையிலுள்ள கோயில். அடுத்த பாடலிலும்
இக் குறிப்பு வருதல் காண்க. செம்பியன் - சோழன்.