2993. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
  திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.         7

     7. பொ-ரை: அக்கினியாகிய அம்பை, மேருமலையை நீண்ட
வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை
எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற இடமாவது, வரிவளையல்கள் அணிந்த
பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்
திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள
மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: அக்கினியாகிய அம்பை. வரிசிலை வளைய - நீண்ட
வில்லை வளைத்து. ஏவி - செலுத்தி. திரிபுரம் எரி செய்த செல்வர்
என்பது இப்பாடலின் முற்பகுதிக்குப் பொருள். வரிவளையவர் -
கீற்றுக்களையுடைய வளையணிந்த மகளிர். வரும் முகில் அணவிய
- படர்ந்து வருகின்ற மேகங்கள் அளாவிய சோதியாரிடம் மாடக்
கோயில்.