2998. எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில்
  நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.     1

     1. பொ-ரை: இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி
நள்ளிருளில், நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார்.
அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர்
மாநகரில் பெருமையிற் சிறந்த, சிவந்த கண்களையுடைய
கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: நெருப்பு, கையில் எரிய ஏந்திக் கொண்டு இரவில்
மயானத்தில் நட்டம் (நடனம்) ஆடுவாய் என்பது முதலிரண்டு
அடியின் கருத்து. அரிசில் அம்பொரு புனல் அம்பர் - அரிசில்
ஆற்றின் நீர்வளம் பொருந்திய திருஅம்பர். குரிசில் - சிறந்தோன்.

     செங்கண்ணவன் - கோச்செங்கட்சோழ நாயனார். நட்டம்
ஆடுபவராகிய சிவபெருமான் அம்பர்மா நகர்க்கோயில்
சேர்ந்திருப்பர் என்பது முடிவு. மகாப்பிரளய காலத்தில் எங்கும்
ஒரே இருள்மயமாய் இருத்தலின், எல்லியில் என்றார். நரி திரிகான்
- சுடுகாடு. “கோயில் சுடுகாடு” என்பது காண்க. (திருவாசகம்)