3000. மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
  பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுன னிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.      3

     3. பொ-ரை: வேதங்களை அருளிப் பாடுகின்ற இறைவர்,
சுடர்விடு நெருப்பு கையில் விளங்கவும், பிறைச்சந்திரன் சடைமுடியில்
அசையவும் ஆடுவார். ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த
வயல்களையுடைய அம்பர் மாநகரில், கோச்செங்கட்சோழ மன்னன்
எழுப்பிய அழகுமிகு கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: மறை - வேதத்தை. புனைபாடலர் - புனைந்து பாடு
தலையுடையவர். சுடர் - நெருப்பானது. கைமல்க - கையிலே தங்க.
அறை - ஒலிக்கின்ற. இறை - கோச்செங்கட் சோழ நாயனார்.
புனை - அலங்கரித்துச் செய்யப்பட்ட. எழில்வளர் - அழகுமிகும்,
இடம்.