3005. எரியன மணிமுடி யிலங்கைக் கோன்தன
  கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.           8

     8. பொ-ரை: சிவபெருமான், நெருப்புப் போன்று ஒளிவீசும்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை
மன்னனான இராவணனின் கரிய, பருத்த கைகளை அடர்த்த
திருவடிகளை யுடையவர். அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம்
பொருந்திய அம்பர் மாநகரில், தம்மைப் பிரிவில்லாத பூதகணங்கள்
புடைசூழ இனிதே வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: எரி அ(ன்)னமணி - நெருப்புப் போன்ற ஒளியுடைய
இரத்தினம். கரியன - கருநிறத்தையுடையன ஆகிய. தடக்கைகள் -
பருத்த கைகள். கரியன - வினைப் பெயர். அரியவர் வளநகர்
...சூழவே - அருந்தவத்தோர் வாழ்கின்ற வளநகராகிய திருவம்பர்ப்
பெருங்கோயிலுக்குத் தம்மைப் பிரிதலில்லாத பூதகணம் சூழ,
மகிழ்வோடு போதலையுடையவர். புரிதல் - செய்தல் என்னும்
பொதுவினை - போதல் என்னும் சிறப்புவினைப் பொருளைத்தந்தது.
புரீ இயவர் என்பதன் மருஉ புரியவர் எனக்கொண்டு
விரும்புதலையுடையவர் எனினும் ஆம். இனி, அரியவர்...நகர் -
என்பதற்கு யாராலுங் காண்டற்கு அரியராய் இருப்பவர். அவர்
வளநகர் அம்பர் ஆகும் எனலும் ஆகும்.