3008. அழகரை யடிகளை அம்பர் மேவிய
  நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.    11

     11. பொ-ரை: அழகரை, அடிகளை, திரு அம்பர் மாநகரில்
எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான
சிவபெருமானை, அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில்,
முத்தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்
பாமாலையாகிய திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின்.

     கு-ரை: நிழல் - ஒளி. உமிழ்திரை - வீசுகின்ற
அலைகளையுடைய கடல். தமிழ்கெழுவிரகினன் - முத்தமிழ்
விரகனாகிய நான் தமிழாற் பாடப்பட்ட மாலையாகிய இப்பதிகத்தை.
ஓதுவீர் - சிவபெருமானைப் பாடுவீர்! இப்பாடல்களைக்
கொள்ளுங்கள்! இப்பாடல் குறில் வருக்க எதுகை. முதல் ஏழு
பாசுரங்களிலும் ஆடுவர் என்றே கடவுளைப் பற்றிக்
கூறப்படுகிறது.