3013. குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
  பொருந்திய பொழிற்றிருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை யில்லையே.     5

     5. பொ-ரை: குருந்து, மாதவி, கோங்கு, மல்லிகை
மலர்ந்துள்ள சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்
தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அரு வலிமையுடைய அசுரர்களின்
மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த பெருந் தகையான
சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, துன்பம் யாவும் நீங்கும்.

     கு-ரை: அரும்திறல் - (வெலற்கு) அரிய வலிமை.
பெருந்தகை - சிவனுக்கு ஒரு பெயர்; “பெண்ணினல்லாளொடும்
பெருந்தகை இருந்ததே” என்பது இத்திருமுறை. பீடை - தோடம்,
காரணப்பெயர்; பிடித்துக் கொள்வது. தமிழ்மொழி. இதனை வட
சொல் எனவுங் கூறுவர். தமிழில் அரிய பொருள் காணா வழியே
வடசொல்லுக்கு ஏகல் வேண்டும். குருந்து ஒரு மரவிசேடம்;
மணிவாசகப் பெருமானைப் பெருந்துறையில் ஆட்கொண்டருளியது
இம் மரத்தினடியிலேதான். “பெருந்துறையில் வந்தோர் கொந்தலர்
நெருங்கிய குருந்தடியிருந்தார்” என்பது பழைய திருவிளையாடல்.