3016. வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
  விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே.         8

     8. பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிமை
வாய்ந்த அரக்கனான இராவணனின் நீண்ட முடிகளைத் தம் காற்
பெருவிரலை ஊன்றி அடர்த்தவர் சிவபெருமான். தம் திருமேனி
முழுவதும் திருவெண்ணீற்றினைப் பூசி, ஒலிக்கின்ற கங்கையைத்
தம் சடைமுடியின் ஒரு பக்கத்தில் அணிந்து திருப்பூவணம் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானைத் தொழுது போற்றும்
அடியவர்களின் பாவம் நாசமாகும்.

     கு-ரை: விரறனில் - விரல்+தனில். பொருபுனல் புடையணி
பூவணம் - கரையை மோதுகின்ற வைகைநீரை ஒரு
பக்கத்திலேயணிந்த பூவணம்.