3017. |
நீர்மல்கு மலருரை வானும் மாலுமாய்ச் |
|
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே. 9 |
9.
பொ-ரை: நீரில் வளரும் தாமரைமலரில் வீற்றிருக்கின்ற
பிரமனும், திருமாலும், தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப்
படுத்தும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு
இயலாதவராயினர். போர்த் தன்மையுடைய மழுப்படையுடைய சிவ
பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூவணத்தை அழகிய மலர்
கொண்டு போற்றுதல் இன்பம் தரும்.
கு-ரை:
நீர்மல்கும்மலர் - தாமரை; நீரஜம் என்பது வட சொல்.
இரண்டாம் அடிக்குப் பிரம விட்டுணுக்கள் முதற்கண் தாம் செருக்கு
அழியப் பெற்றுப் பெருமானைச் சரண் புகுந்திருந்தால் இவ்வளவு
துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை என்பது பொருள்.
பூவணம் வணங்குவதே முத்தியின்பமாம். ஆலயம் தானும்
அரனெனத் தொழுமே என்பது சிவஞான போதம். கூடும்
அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின்
விளங்கினார் என்பது பெரியபுராணம்.
|