3018. |
மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும் |
|
குண்டருங்
குணம்அல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம்
கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே. 10
|
10.
பொ-ரை: மண்டை என்னும் ஒருவகைப் பாத்திரத்தை
ஏந்திப் பிச்சையெடுத்துத் திரிகின்ற புத்தர்களும், சமணர்களும்,
இறையுண்மையை உணராது கூறும் பயனற்ற பேச்சைக் கேளாது,
வண்டுகள் மொய்க்கின்ற வளமுடைய சோலைகள் நிறைந்த
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து அங்கு
வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது
போற்றுதல் நம் கடமையாகும்.
கு-ரை:
மண்டை - ஒருவகைப் பாத்திரம். வாய்பாடு
இல்லாதது. உழிதரு தேரர் - அலைந்து திரிகின்ற தேரர், புத்தர்.
குண்டர் - போக்கிரிகள். குணம் அல பேசுங்கோலத்தர் -
பயனில்லாத பேசுங் கோலத்தையுடையவர்கள். திருப்பூவணத்தைத்
தரிசித்து அவருடைய அடியைத் தொழுது துதிப்பது. கன்மம் -
காரியம். நமது கடமையாகும். தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள்
வாக்காலும் அறிக. நான்காம் அடிக்குப் பூவணம் கண்டு அவர்
அடிதொழுது என்க.
|