3025. இன்புடை யாரிசை வீணை பூணரா
  என்புடை யாரெழின் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.     6

     6. பொ-ரை: திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப்
பாடுவதில் மகிழ்பவர். தம்முடைய அழகிய திருமேனியில்
பாம்பையும்,எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர். எரிகின்ற
நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர். யாவற்றுக்கும் மூலப்
பொருளாகிய, முதற்பொருளாக விளங்குபவர். அன்பர்களிடத்து
அன்புடையவர்.

     கு-ரை: இன்பு - வீணை - இசை வீணை பாடுதலில் மகிழ்
வுடையார். பூண் - ஆபரணமாக. அரா என்பு உடையார் -
பாம்பையும் எலும்பையும் உடையவர். மேனிமேல் எரிமுன்பு
உடையார். முதல் - காரணம். முதல் ஏத்தும் அன்பர் - உலகமாகிய
காரியத்துக்கு இறைவன் நிமித்த காரணமாம் தன்மையை அறிந்து
ஏத்தும் இக்கருத்து “கோலத்தாய் அருளாய் உனகாரணம் கூறுதுமே”
என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும் காண்க.