3028. பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர்
  வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.      9

     9. பொ-ரை: தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய
வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம்,
ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம்
மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.

     கு-ரை: பூம(ன்)னும் - பூவில் வாழும். பொற்பு அமர் வாமனன்
- அழகு பொருந்திய வாமன அவதாரமெடுத்த திருமாலும். பொற்பு
அமர் என்பது குறிப்பு. கருக்குடி...நன்மையே - கருக்குடி நமது
மனத்தில் வரும்படி நாம் நினைத்தல் நன்மையேயாகும். மனம் -
மனன் எனப் போலியாய் ஏழனுருபுபெற்று மனனில் என்று ஆகி
அதனோடு இன்சாரியை பெற்று “மனனினில்” என்று ஆயிற்று.