3031. |
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் |
|
நெஞ்சகம்
நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 1
|
1.
பொ-ரை: தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்,
மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப்
போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய
மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி
இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய
மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள்
இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன
திருவைந்தெழுத்தே.
கு-ரை:
துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் - தூங்கும்
போதும் விழித்துக்கொண்டிருக்கும்போதும்; போழ்தின் என்ற
சொல்லைத் துஞ்சல் என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும்,
துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்க. நெஞ்சகம் - மனம். நைந்து
- உருகி. நாள்தோறும் மாந்தரீர் நினைப்பீர்களாக. வஞ்சகம் இன்றிச்
சிவபெருமான் திருவடியை மார்க்கண்டேயர் வாழ்த்தி வழிபட அவர்
வாழ்நாள்மேல் வந்த யமன் அஞ்சும்படி உதைத்தன
திருஐந்தெழுத்துமே. வஞ்சகமாவது, இறைவன் மேற் படரும்
சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிறவிடங்களிற்
செலுத்தி வஞ்சித்தல். இதனை நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ என்ற
திருநேரிசையால் அறிக. திரு ஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை
நீங்குவார் என்பது இதனாற் பெற்றாம்.
|