3032. மந்திர நான்மறை யாகி வானவர்
  சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.          2

     2. பொ-ரை: மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும்
ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை
ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும்.
செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும்
காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும்
செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: மந்திரமும் நான்கு வேதங்களும் ஆகி;
திருவைந்தெழுத்தே வேதம் என்றது. மறையிற்கூறும் அனைத்தும்
ஐந்தெழுத்தில் அடங்கும் என்பதுபற்றி “அஞ்செழுத்தே ஆகமமும்
அண்ணல் அருமறையும்” என்ற உண்மை விளக்கம் 45 காண்க.
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்
அஞ்செழுத்தும் - அழல் ஓம்பிச் செந்நெறி நிற்கும் வேதியருக்கும்
மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்கத்தக்க மந்திரம் திரு
ஐந்தெழுத்தேயாம் என்க. அந்தி - சந்திவேளை மூன்று. காலை,
நண்பகல், மாலை; “காலை அந்தியும் மாலை அந்தியும்” என்பது
புறநானூறு. “அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில், அருக்கன்
ஆவான் அரன் உரு அல்லனோ” (திருக்குறுந்தொகை) இவற்றால்
அந்தி என்ற சொல் மூன்று வேளையையும் குறிப்பதை அறிக.
இப்பதிக வரலாற்றைச் செழு மறையோர்க்கருளி அவர்
தெளியுமாற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார்.
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின்
திருப்பதிகம் அருளிச் செய்தார் என்னுந் திருத்தொண்டர்
புராணத்தால் அறிக.