| 
         
          | 3034. | நல்லவர் 
            தீயர் எனாது நச்சினர் |   
          |  | செல்லல் 
            கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
 தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.          4
 |  
            4. 
        பொ-ரை: புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய
 மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன
 திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு
 செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப்
 போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.
       கு-ரை: 
        நல்லவர் - புண்ணியர். தீயவர், பாவியர், என்று பிரிக்காமல் யாவரேயாயினும் விரும்பித் திருவைந்தெழுத்தைச்
 செபிப்பார்களேயாயின், துன்பந்தரும் மலங்கள் நீங்கச்
 சிவப்பேறாகிய முத்தியின்பத்தை அடையலாம். உயிர்போகும்
 தறுவாயில் நினைத்தாலும் உச்சரித்தாலும் எமவாதை
 இல்லாதொழிக்கலாம் என்பது. இதனை மந்தரம் அன பாவங்கள்
 மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை
 செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே என்ற
 பாசுரத்தாலும், விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
 உண்ணியபுகில் அவையொன்றும் இல்லையாம், பண்ணிய உலகினில்
 பயின்ற பாவத்தை, நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே
 என்னும் பாசுரத்தாலும் அறிக. கொல்ல...இடத்து - மரணத்
 தறுவாயில் வரக்கடவனவாகிய துன்பங்களைக் கெடுக்கும்.
 |