3036. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
  வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.     6

     6. பொ-ரை: தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும்,
கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும்,
முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும்
பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால்
மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: தும்மும்போதும் இருமும்போதும் உடலில் நீங்குவது
உள்ளமையால் அப்பொழுதும், கொடிய நரகத்துன்பம்
நுகரவந்தவிடத்தும், முற்பிறப்பிற் செய்தவினை இம்மைக்கண்
அடர்த்துச் சேரும்பொழுதும், உச்சரிக்கத் துணையாவதும் இம்மையில்
ஓயாது ஓதி வந்ததின் பயனாக மறுபிறவியில் வந்து துணையாவதும்
திருவைந்தெழுத்தே.