3037. வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
  பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.          7

     7. பொ-ரை: இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து
இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை
நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலை
பெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன
திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: வீடு - இங்குச் சாதல் என்னும் பொருளில்
வந்துள்ளது. பிறப்பு - பிறத்தல். சாதலும் பிறத்தலும் தவிர்த்து.
மெச்சினர் - தன்னைப் பாராட்டிப் பயில்பவர். பீடை - பிறவியில்
வரக்கடவ துன்பங்கள். அவை:- பிற உயிர்களால் வருவன,
தெய்வத்தால் வருவன, தன்னால் வருவன என மூவகைப்படும்.
மாடு - செல்வம். கொடுப்பன. திருவைந்தெழுத்து செல்வமும்
தரும் என்பதைச் “சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்,
நந்திநாமம் நமச்சிவாயவே” என்பதற்கண் காண்க. மன்னும் -
நிலைபெற்ற, மா நாடகம் - பெரிய கூத்தை, ஆடி மகிழ்வனவும்
திருவைந்தெழுத்துக்களாம். அஞ்செழுத்தே நடம் ஆடி உகப்பன
என்றது “சிவாயநம வென்னும் திருவெழுத்தைந்தாலே அபாய மற
நின்றாடுவான்.” என்ற உண்மை விளக்கச் செய்யுட்கருத்து.