3038. வண்டம ரோதி மடந்தை பேணின
  பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.         8

     8. பொ-ரை: வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா
தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும்.
முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான்.
அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில்
அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன
இவ்வைந்தெழுத்தாகும்.

     கு-ரை: வண்டுஅமர் ... பேணின - வண்டுகள் விரும்பும்
கூந்தலையுடைய அம்பிகையாரால் பாராட்டிச் செபிக்கப்பெற்றன.
இராவணன் பாடியது இப் பஞ்சாக்கரமே என்கிறது இரண்டாம் அடி.
தொண்டர்கள் - அடியார்கள். கொண்டு - தங்கள் கடமையைக்
கொண்டு. துதித்தபின் - செபித்த அளவில். அவர்களுக்கு
அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்
தெழுத்துமாம். தொண்டர்கள் கொண்டு துதித்தமை ஆனாய
நாயனார் புராணம் (தி.12) முதலியவற்றாலறிக.