3045. |
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை |
|
உதைத்தவன்
உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன்
நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 4 |
4.
பொ-ரை: இறைவன் சனகாதி முனிவர்கட்கு
அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன்.
மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால்
உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும்
எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான்
வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.
கு-ரை:
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு. அறம் முன்
விதைத்தவன் - சரியையாதி நாற்பதப் பொருள்களையும் மனத்தில்
பதிய உபதேசித்தவன். அறம் என்பதை சரியை கிரியை
இரண்டினையும் குறிக்கும். அதனை நல்ல சிவதன்மத்தால்
எனவரும் திருக்களிற்றுப் படியாரால் அறிக. ஈண்டு அறம்
முடிவான ஞானத்தின் மேலது. விதைத்தவன் என்றதனால்
சிவானந்தப் பெரும்போகம் விளைந்தமையும் காண்க.
|