3046. |
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் |
|
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே. 5 |
5.
பொ-ரை: இறைவன் எல்லாப் பொருள்கட்கும்
முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனானவன். கொத்தாகப்
பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும்
ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச்
சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள்
நீங்கும்படி செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம்
திருவிற்கோலம் ஆகும்.
கு-ரை:
கூகம் - ஊர் (கூவம் என வழங்குகிறது)
திருவிற்கோலம் - திருக்கோயில். முந்தைகாண் மூவர்க்கும்
முதலானான் காண் என்னும் திருத்தாண்டகத்தோடு முதலடியை
ஒப்பிடுக.
|